பழைய & புதிய ஏற்பாடு ஒரு அறிமுகம் | Old & New Testament Introduction

வேதாகமமானது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என இரண்டு பிரிவுகளை கொண்டது. பழைய ஏற்பாடு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பும் புதிய ஏற்பாடு கிறிஸ்து பிறப்பிற்கு பின்பும் எழுதப்பட்டது. இந்த இரண்டு ஏற்பாடுகளின் சிறிய விளக்கத்தை இந்தப் பகுதியில் காணலாம்.

பழைய ஏற்பாட்டை ஐந்து பிரிவுகளாக பிரிக்கலாம். 

                 முதலாவது பிரிவானது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய ஐந்து புத்தகங்களை கொண்டது. இந்த புத்தகங்கள் சட்ட புத்தகங்கள் என்றும் மோசேயின் ஆகமங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. தேவன் எவ்வாறு வானத்தையும் பூமியையும் அதில் உள்ள அனைத்து படைப்புகளையும், மனிதர்களையும் படைத்தார் என்றும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள், இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து எவ்வாறும் மோசேயின் மூலமாக மீட்டு கொண்டு வந்தார் என்ற காரியங்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமல்ல பரிசுத்த தேவனை இஸ்ரவேல் ஜனங்கள் அணுக வேண்டிய முறை, லேவி கோத்திரத்தார் ஆசாரிய ஊழியம் செய்யும் முறை, இஸ்ரவேல் ஜனங்கள் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள், நியாயப் பிரமாணம் என்றால் என்ன, பத்து கட்டளைகள் ஆகியவற்றை இந்த புத்தகங்களில் விரிவாக காணலாம்.

                இரண்டாவது பிரிவானது இஸ்ரவேலின் சரித்திரத்தை விளக்குகிறது. யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்ரா, நெகேமியா, எஸ்தர் ஆகிய 12 புத்தகங்களை கொண்டது இந்த இஸ்ரவேலின் சரித்திர பாகமாகும். யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேல் ஜனங்கள் காணானுக்குள் நுழைந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வசிக்க ஆரம்பிக்கின்றனர். முதலில் நியாயாதிபதிகள் இஸ்ரவேல் ஜனங்களை ஆளத் தொடங்குகின்றனர். அதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்களின் கோரிக்கையை ஏற்று சாமுவேல் தீர்க்கதரிசி அவர்களுக்கென்று சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்கிறார்.  தாவீது, சாலமோன், யோசபாத், ஆசா போன்ற முக்கியமான ராஜாக்கள் இஸ்ரவேலை ஆளுகை செய்கின்றனர். முதன் முதலாக சாலமோனுடைய கால கட்டத்தில் தேவனுக்குன்று ஆலயம் கட்டப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் தேவன் அவர்களைப் பாபிலோனியர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.  பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்தை தீக்கிரையாக்கி, எருசலேம் அலங்கத்தை இடித்து இஸ்ரவேல் ஜனங்களை தன்னுடைய நாட்டிற்கு கடத்திக்கொண்டு போகிறான். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பின்பு செரு பாபேல், எஸ்ரா, நெகேமியா ஆகியோர் தலைமையில் இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்தையும், எருசலேம் அலங்கத்தையும் திரும்ப கட்டி எழுப்புகின்றனர். இவ்வாறு இந்த பகுதியில் இஸ்ரவேல் ஜனங்களுடைய முழு வரலாற்றையும் அறிந்து கொள்ளலாம்.

                மூன்றாவது பிரிவானது யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய ஐந்து புத்தகங்களை கொண்ட இலக்கியங்கள்/பாடல்கள் பிரிவு ஆகும். உத்தமனாகிய யோபு சாத்தானால் சோதிக்கப்பட்ட போது எவ்வாறு தேவனுக்கென்று உறுதியாக நின்றான் என்றும், அவனுடைய நண்பர்கள் அவனுக்கு எதிராக அறிவுரைகளை வழங்கியபோது அவர்களுக்காக வேண்டிய நிகழ்வுகளையும், ஒரு மனிதன் தன்னுடைய துன்ப காலத்திலும், இன்ப காலத்திலும் எவ்வாறு சங்கீதகளினாலும் பாட்டுகளினாலும் தேவனை துதிக்க வேண்டும், வாலிபன் தன்னுடைய வாலிப பருவத்தில் பரிசுத்தமாக வாழ போதிக்கும் ஞான உபதேசங்கள், காதல் பாட்டு போன்றவற்றை இங்கு காணலாம்.

                நான்காவது பிரிவானது ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல் ஆகிய ஐந்து புத்தகங்களை கொண்டது. இவை அளவில் மிகப்பெரியவைகளாக இருப்பதினால் பெரிய தீர்க்க தரிசனங்கள் என அழைக்கப்படுகின்றன. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு கன்னிகையின் வயிற்றில் பிறப்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தார். குறிப்பாக இஸ்ரவேல்  ஜனங்கள் தங்கள் பாவங்களினிமித்தமும் அக்கிரமங்கனிமித்தமும் எவ்வாறு பாபிலோன் தேசத்திற்கு அடிமைகளாக கொண்டு போகப்படுவார்கள், அங்கு அவர்கள் அனுபவிக்கப் போகும் இன்னல்கள், அங்கிருந்து எவ்வாறு மீண்டும் எருசலேமிற்கு திரும்பி வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள் என தீர்க்கதரிசனங்களாகவும், எச்சரிப்பின் வசனங்களாகவும் இங்கு உரைக்கப்பட்டுள்ளன. எருசலேமின் நிலைமையை கண்டு புலம்பும், புலம்பல் பாடல்களும் உள்ளன.

                ஐந்தாவது பிரிவானது ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா ஆகிய பன்னிரெண்டு புத்தகங்களை கொண்டது. இவை அளவில் சிறியவைகளாக இருப்பதினால் சிறிய தீர்க்க தரிசனங்கள் எனப்படுகின்றன. இந்த பகுதிகளிலும் இயேசு கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டுள்ளன. 

புதிய ஏற்பாட்டையும் ஐந்து பிரிவுகளாக பிரிக்கலாம். 

                முதலாவது பிரிவானது மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷ புத்தகங்களை கொண்டது. இந்த புத்தகங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எங்கு பிறந்தார்? அவர் எவ்வாறு ஊழியம் செய்தார்? மனிதருடைய இரட்சிப்புக்காக சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்பதை தெளிவாக காணலாம்.

                இரண்டாவது பிரிவு அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் கொண்டுள்ளது. புதிய திருச்சபை எவ்வாறு உருவானது? இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறி போன பின்பு அவருடைய சீஷர்கள் உலகமெங்கும் பரவிச் சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இரட்சிப்பை குறித்து சுவிசேஷமாய் அறிவித்ததையும், அவர்கள் அனுபவித்த பாடுகளைம் குறித்து இங்கு எழுதப்பட்டுள்ளது.

                மூன்றாவது பிரிவானது ரோமர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன், எபிரெயர் ஆகிய 14 தனிப்பட்ட நிருபங்களை கொண்டது. இவை தனிப்பட்ட நபர்களுக்கும், சபைகளுக்கும் பவுலினால் எழுதப்பட்ட நிருபங்கள். இவற்றில் எபிரேயர் தவிர மற்ற 13 நிருபங்களும்  பவுல் எழுதினார். எபிரெயர்  நிருபத்தில் உள்ள எழுத்துக்கள் பவுலின் மத்த நிருபத்தோடு ஒத்துப் போவதால் எபிரெயர் நிருபத்தையும் அவர்தான் எழுதியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

                நான்காவது பிரிவானது யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா ஆகிய ஏழு புத்தகங்களை கொண்ட பொதுவான நிருபங்களாகும். இந்த நிருபங்கள் தனிப்பட்ட நபர்களுக்கென்றும் தனிப்பட்ட திருச்சபைகளுக்கென்றும் எழுதப்படாமல். பொதுவான திருச்சபைகளுக்கென்றும் எழுதப்பட்டது.

                ஐந்தாவது பிரிவு வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை கொண்ட தீர்க்கதரிசன பகுதியாகும். இங்கு கடைசி காலங்களில் மக்கள் அனுபவிக்க போகிற பாடுகளை குறித்தும், நியாயத்தீர்ப்புகளைக் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை குறித்த அநேக விளக்க உரைகள் இருந்தாலும் இதன் மையக் கருப்பொருள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடைசி காலங்களில் சாத்தானை மேற்கொண்டு. உண்மையும் உத்தமமுமாய் வாழ்ந்த மக்களுக்கென்று புதிய வானத்தையும் புதிய பூமியையும் ஆசீர்வாதமாக கொடுப்பார். ஆமென்.

இன்றைய வசனம்

அவராலேயன்றி (இயேசுவாலேயன்றி) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12

Post a Comment

0 Comments