வேதாகமம் என்பது தேவனைப் பற்றி மனிதன் அறிந்து கொள்ளவும், தேவனோடு உள்ள உறவை வலுப்படுத்திக் கொள்ளவும், தேவ சத்தத்தை கேட்கவும் எழுதப்பட்டுள்ளது. ஒரு மனிதன் பிறந்தது முதல் சாகும் வரை எப்படி வாழ வேண்டும், ஒருவர் மேல் ஒருவர் எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும், ஏன் இரட்சிப்படைய வேண்டும், இரட்சிப்படைவதற்கான வழி என்ன, நித்திய ஜீவனை பெற வழி என்ன, என அனைத்து காரியங்களும் இவ்வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
Bible என்ற சொல் Biblia என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து வந்தது. இதற்கு 'புத்தகங்கள்' என்று பொருள். வேதாகமமானது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளை கொண்டது. ஏற்பாடு என்பதற்கு உடன்படிக்கை(covenant) என்று அர்த்தம்.தொடக்க காலத்தில் பழைய ஏற்பாடு எபிரேய(Hebrew) மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க(Greek) மொழியிலும் எழுதப்பட்டன. சில பகுதிகள் அரமேயா(Aramic) மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.
அதன் பிறகு உலகின் பல மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் அநேக மொழிகளில் மொழிபெயர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. உலகின் பழமையான மற்றும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் வேதாகமம் மட்டுமே.
பழைய ஏற்பாடு 39 புத்தகங்களை கொண்டது. இது கிமு 1500 லிருந்து கிமு 400க்கு இடைப்பட்ட காலங்களில் 25 முதல் 30 தேவ மனிதர்களால் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு 27 புத்தகங்களை கொண்டது. இது கிபி 50 லிருந்து கிபி 100க்கு இடைப்பட்ட காலங்களில் 8 முதல் 10 தேவ மனிதர்களால் எழுதப்பட்டது.
வேதத்தில் உள்ள 66 புத்தகங்களும் தேவ மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதினார்கள். ஆகவே வேதத்தின் தலையாய ஆசிரியர் பரிசுத்த ஆவியானவரே.
2 தீமோத்தேயு 3 16, 17 ல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
"16 - வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,
17 - அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது."
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible