திருநெல்வேலி திருமண்டலம் வரலாறு

நம்முடைய திருநெல்வேலி திருச்சபையானது கிட்டதட்ட 250 ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக வளர்ந்து பெருகுகிறது.

Rev.C.F. சுவார்ட்ஸ் ஐயர் அவர்களால் நடப்பட்டு, திரு.சத்தியநாதன் மற்றும் அவரோடுகூட இணைந்து பணியாற்றிய சபை ஊழியர்களின் கவனத்தில் விடப்பட்டு SPCK வின் மிஷனெரிகளால் நீர்பாய்ச்சப்பட்டு, இருபெரும் மிஷனெரி ஸ்தாபனங்களான CMS (Church Mission Society) மற்றும் SPG (Society for Propagating Gospel) போன்றவற்றின் மிஷனெரிகளால் வளர்க்கப்பட்டது நெல்லைத் திருச்சபை. 

இதன் முதல் ஞானஸ்நானம் 03.03.1778 அன்று Rev.C.K.சுவார்ட்ஸ் ஐயர் அவர்களால் மராத்திய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட, தஞ்சாவூரிலிருந்து கர்னல் லிட்டில்டன் அவர்கள் மூலமாக நெல்லை சீமைக்கு அழைத்து வரப்பட்ட கோகிலா என்ற பிராமண விதவைக்கு ''குளோரிந்தாள்" என்று கொடுக்கப்பட்டது. 

இந்த ஞானஸ்நானத்திலிருந்துதான் நம்முடைய திருச்சபை வரலாறு ஆரம்பமாகிறது. இந்த குளோரிந்தாள் அம்மையார் "நம்முடைய திருச்சபையின் தாய்" என்று அழைக்கப்படுகிறார்கள். இவ்வம்மையாரின் சிறப்பான ஊழியத்தின் மூலம் 1780ல் சுமார் 40பேர் (13 வகையான இனப்பிரிவை சார்ந்தவர்கள்) ஞானஸ்நானம் பெற்றனர். நம்முடைய திருச்சபையின் முதல் சபை டாப்பு ஆயத்தமானது. இதனையே நாம் தொடக்க ஆண்டாக கொண்டு திருமண்டல ஆண்டை ஆசரிக்கிறோம்.

நம்முடைய திருச்சபை வளர தேவன் பயன்படுத்திய பாத்திரங்கள் Rev.C.F.சுவார்ட்ஸ், Rev.ஜெனிக்கே ஐயர், திருமதி.குளோரிந்தாள் அம்மையார், Rev.சத்தியநாதன் (முதல் சபை ஊழியர் மற்றும் முதல் குரு அபிஷேகம் பெற்றவர்), திரு.தாவீது சுந்தரானந்தம் (நெல்லைத் திருச்சபையின் முதல் இரத்த சாட்சி), நெல்லைத் திருச்சபையின் முதல் ஆலயம் (குளோரிந்தாள் ஆலயம்) 24.08.1785 ஆம் ஆண்டு Rev.C.K சுவார்ட்ஸ் ஐயர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று 85 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.



மேலும் CMS மற்றும் SPG போன்ற ஸதாபனங்கள் மிஷனெரிகளை அனுப்பி நம்முடைய நெல்லைத் திருச்சபை வளர பங்காற்றினார்கள். Rev.C.T.E. ரேனியஸ் (நெல்லை அப்போஸ்தலன்), Rt.Rev.கால்டுவெல் (தென்நெல்லை அப்போஸ்தலன்), Rt.Rev.ராக்லாந்து (வடநெல்லை அப்போஸ்தலன்), Rev.மர்காஷியஸ், Rev. சர் தாமஸ், பேராயர் சார்ஜெண்ட், Rev. பேரன்புரூக் போன்றோர் 19ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மிஷனெரிகளாக நெல்லைத் திருச்சபை வளர சிறந்த பங்காற்றினார்கள். குறிப்பாக சபைகளை நிறுவி பாடசாலைகள் மற்றும் மருத்துமனைகள் அமைத்து நம்முடைய நெல்லைத் திருமண்டலத்தில் மக்களின் வாழ்க்கை சமுதாய நிலையிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கிட செய்தார்கள். இக்காலத்தில் நம்முடைய திருச்சபையில் மக்கள் திரள்திரளாக. கூட்டம் கூட்டமாக சபையில் விசுவாசிகளானார்கள். 

சாதாரண 40 பேரைக்கொண்டு குளோரிந்தாள் அம்மையாரின் காலத்தில் 1780ல் தொடங்கிய நம்முடைய திருநெல்வேலி திருச்சபை 1896ல் திருநெல்வேலி திருமண்டலமாகி இன்று 245 ஆண்டுகளைக் கடந்து உலகம் போற்றும் திருச்சபையாக அநேக மிஷனெரி ஸ்தாபனங்களின் பிறப்பிடமாகவும், ஊழியர்களின் தாயாகவும், வானளாவிய கோபுரங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் திரள்திரளான விசுவாசிகள் என்று ஓங்கி செழிப்புற்று வளர்ச்சியடைந்திருப்பதன் காரணம், கர்த்தரின் கிருபையே.

கர்த்தர் நம்மேல் வைத்த கிருபை பெரியது. கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது. கர்த்தர் தாமே தம்முடைய நித்திய கிருபையுடன் நம்முடைய திருச்சபைக்கு இரங்கி, நம்மை ஆசீர்வதித்து நம்முடைய திருமண்டலத்தை வழிநடத்திட ஜெபிப்போம். ஆமென். 

Post a Comment

0 Comments